அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த விசாரணைக் குழுவில் நீண்டகால விமானியும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் நடவடிக்கைகள் பிரிவு இயக்குநருமான கேப்டன் ஆர் எஸ் சாந்துவை விமான விபத்து விசாரணை ஆணையம் (ஏஏஐபி) சேர்த்துகொண்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவமிக்க கேப்டன் சாந்து, போயிங் 787-8 ரக விமானத்தைச் சோதனை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர். தற்போது விபத்துக்குள்ளான விமானத்தையும் 2013ஆம் ஆண்டில் அவர் நேரடியாகச் சென்று இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்.
“அகமதாபாத்தில் கடந்த மாதம் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா போயிங் 787-7 ரக விமானம் குறித்து தொடரும் விசாரணையில் பழுத்த அனுபவம் கொண்ட ஆர் எஸ் சாந்துவை ஏஏஐபி இணைந்துள்ளது,” என்ரு தகவல் அறிந்த வட்டாரத்தைச் சுட்டியது பிடிஐ செய்தி நிறுவனம்.
விசாரணை குழுவில் இணையும்படி ஏஏஐபி விடுத்த வேண்டுகோளைத் கேப்டன் சாந்து ஏற்றுக்கொண்டதாகவும் அது குறிப்பிட்டது.
அவியாஸியொன் என்ற விமானத்துறை ஆலோசனை நிறுவனத்தை நிறுவி நடத்திவரும் கேப்டன் சாந்து, டாட்டா குழும விமானங்களுக்காக ஒருங்கிணைப்புக் குழுவை வழிநடத்தியவர்.
விசாரணையில் துறை சார்ந்த நிபுணரின் பங்களிப்பு தேவை என்று பல்வேறு விமானித் தொழிற்சங்கங்கள் கூறியதை அடுத்து கேப்டன் சாந்து விசாரணைக் குழுவில் இணைந்தார்.
விசாரணையில் விமானிகள் பிரதிநிதிகளை ஈடுபடுத்தும்படி இந்திய விமானிகள் சங்கம் மீண்டும் மீண்டும் ஏஏஐபியைக் கேட்டுக்கொண்டது.
இப்போதைக்கு ஏஏஐபியில் உள்ள இதர நிபுணர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
56 வயது சஞ்செய் குமார் சிங்கின் தலைமையில் செயல்படும் விசாரணைக் குழுவில் ஐவர் உள்ளனர்.
விசாரணைக் குழுவுக்கு துணைப்புரியும் நிபுணர் குழுவில் விமானிகள், பொறியாளர்கள், விமானத்துறை மருத்துவ வல்லுநர்கள், விமானத்துறை மனோவியல் வல்லுநர்கள், குரல் பதிவுப் பெட்டி ஆய்வாளர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்தோர் உள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் ஜூன் 12ஆம் தேதி விழுந்ததில் 260 பேர் மாண்டனர். அவர்களில் 19 பேர் விமானம் விழுந்த தங்குவிடுதியில் இருந்தவர்கள்.
புறப்பாட்டுக்குப் பின் விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருளைச் செலுத்தும் விசை முடக்கப்பட்டது விபத்துக்கான காரணம் என்று தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

