தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குளிரூட்டி கோளாறு; சிங்கப்பூர் செல்லவிருந்த விமானம் ரத்து

2 mins read
81b38dc9-7e07-4e90-85ea-d764cb0428ef
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட 200க்கும் மேற்பட்ட பயணிகள். - படம்: பிடிஐ

புதுடெல்லி: புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டது.

செப்டம்பர் 10ஆம் தேதி மாலை அந்த விமானம் சிங்கப்பூர் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் அமர்ந்திருந்த நிலையில் அதன் குளிரூட்டி அமைப்பில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இரண்டு மணி நேரம் முயன்றும் கோளாற்றைச் சரிசெய்ய முடியாத காரணத்தால் பயணிகளை விமானத்தைவிட்டு இறங்கும்படி விமானப் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

பயணிகளிடம் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது.

இது குறித்து இந்திய ஊடகத்திடம் பயணி ஒருவர் கூறியபோது, “புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இரவு 11 மணியளவில் புறப்படத் திட்டமிடப்பட்ட விமானத்தின் குளிர் சாதன அமைப்பும் மின் விநியோக அமைப்பும் பழுதடைந்தன. பழுது நீக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து எங்களை விமானத்திலிருந்து கீழே இறங்கி விமான நிலையத்தில் மறு அழைப்பு வரும்வரை காத்திருக்கக் கூறினர்,” என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஏர் இந்தியா நிர்வாகம் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்ட அறிக்கையில், “பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அவர்களிடம் விமானம் குறித்த அனைத்து தகவல்களும் உடனுக்குடன் பகிரப்பட்டது. விமான நிலையத்தில் காத்திருக்கும்போது உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் அவர்களுக்குச் செய்துதரப்பட்டது,” எனக் கூறியது.

மேலும், “பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் வேறு விமானத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்குச் சிங்கப்பூர் நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்,” என அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்