புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை தயாராகிவிட்டது. இந்த அறிக்கை இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மிக விரைவில் பொது வெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 12ஆம் தேதியன்று குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 275 பேர் பலியாகினர்.
போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒரு பயணியைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், விமானக் கறுப்புப் பெட்டியின் இரு பாகங்களும் மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகிறது. இதையடுத்து, விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி (AAIB) இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தது. புலனாய்வுக் குழுவினர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, தீவிர ஆய்வு நடத்தி தகவல்களைச் சேகரித்தனர்.
இந்நிலையில், கறுப்புப் பெட்டி தரவுகளை மீட்டெடுக்கும் வசதி இந்தியாவில் இல்லாததால் அப்பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. எனினும், இந்திய அரசு பின்னர் இதைத் திட்டவட்டமாக மறுத்தது.
இதையடுத்து, ‘ஏஏஐபி’ தரவுகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவானது, தனது முதற்கட்ட அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையில் என்ன இடம்பெற்றுள்ளது என்ற அதிகாரபூர்வ அறிக்கையோ, தகவலோ இன்னும் வெளியாகவில்லை. எனினும், விபத்துக்கான காரணம் குறித்த முக்கியத் தகவல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விரைவில் இந்திய அரசின் அறிவிப்பு வெளியாகக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகே விபத்துக்கு மனிதத் தவறு காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தெரியவரும்.