மீண்டும் இந்தியா, சீனா இடையே நேரடி விமானச் சேவை தொடங்கிய ஏர் இந்தியா

மீண்டும் இந்தியா, சீனா இடையே நேரடி விமானச் சேவை தொடங்கிய ஏர் இந்தியா

2 mins read
7548becf-c58b-402b-b9e3-809142051116
ஷாங்காய், டெல்லி இடையேயான ஏர் இந்தியா விமானச் சேவையை தொடங்கி வைத்த சீனாவுக்கான இந்திய துணைத் தூதர் ஜெனரல் பிரதிக் மாத்தூர். - படம்: wionews.com
Google News Preferred Icon

புதுடெல்லி: ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு நேரடி விமானச் சேவையை தொடங்கியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியா, சீனா இடையே ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நேரடி விமானச் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், ‘கொவிட் 19’ தொற்றுப்பரவல் நெருக்கடியின்போது விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அதன் பின்னர் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் ஏற்பட, இருதரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக இருதரப்புத் தூதரக உறவுகள் மீண்டும் வலுவடைந்து வருகின்றன. சீன வணிகர்கள் இந்தியாவுக்குச் சென்று திரும்ப சிறப்பு விசா திட்டம் அறிவிக்கப்பட்டது. அனைத்துலக அரங்கிலும் இரு நாடுகளும் நட்பு பாராட்டத் தொடங்கி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே விமானச் சேவை தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சீனாவின் ஷாங்காய் மாநகரின் புடோங் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு 230 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘போயிங் 787’ ரக விமானம் இயக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா, சீனா இடையே மக்கள் தொடர்பு, வணிகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி காணும் என இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், சீனாவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக இந்த விமானச்சேவை தொடக்கம் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சீனாவிமானச் சேவைஇந்தியா