சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவான எஸ்ஐஏ என்ஜினியரிங்கும் ஏர் இந்தியாவும் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
‘எம்ஆர்ஓ’ எனப்படும் விமானங்களைப் பராமரித்தல், பழுதுநீக்குதல், முழுமையாகச் சீரமைத்தல் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு அது.
மேலும், விமானப் போக்குவரத்துக்கான உலகளாவிய எம்ஆர்ஒ மையமாக இந்தியா வளர்ச்சி பெறுவதை ஆதரிக்கும் நோக்கம் கொண்டது அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் வட்டார விமானப் போக்குவரத்துச் சந்தைகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவில் எம்ஆர்ஒ கூட்டு முயற்சியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதில் அடங்கக்கூடும் என்று எஸ்ஐஏ என்ஜினியரிங் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த எம்ஆர்ஓ சூழலை இணைந்து உருவாக்க, தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் ஏர் இந்தியாவின் விமானச் செயல்பாட்டு கட்டமைப்பையும் இருதரப்புக் குழு பயன்படுத்திக்கொள்ளும்.
இந்தியாவின் பெங்களூரு நகரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அடிப்படைப் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்த கடந்த 2024 மே மாதம் எஸ்ஐஏ என்ஜினியரிங் நிறுவனம் அதன் உத்திபூர்வப் பங்காளியாக நியமிக்கப்பட்டது.
இதற்கிடையே, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள விமானப் போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யக்கூடிய எம்ஆர்ஓ பங்காளித்துவத்தைக் கூட்டாக உருவாக்கத் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்த இருதரப்புக் குழு எண்ணியுள்ளதாக எஸ்ஐஏ என்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சின் யாவ் செங் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பு, வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் எஸ்ஐஏ என்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குகள் 0.3 விழுக்காடு உயர்ந்து S$3.47 என வர்த்தகமானது.

