புதுடெல்லி: இந்திய விமானப்படை தளபதியாக உள்ள விவேக் ராம் சவுத்ரி செப்டம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் பிரீத்சிங் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏர் சீப் மார்ஷலாக பதவி உயர்வு பெறும் இவர், செப்டம்பர் 30ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1964ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி பிறந்த அமர் பிரீத் சிங், கடந்த 1984ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விமானப்படையில் போர் விமானியாகப் பணியில் சேர்ந்தார். கடந்த 40 ஆண்டுகளில் போர் விமான கமாண்டர், மிக்-27 படைப்பிரிவின் தலைமை அதிகாரி, விமானப்படை தளத்தின் ஏர் ஆபிசர் கமாண்டிங் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி விமானப் படையின் 47வது துணைத் தளபதியாக திரு அமர் பிரீத்சிங் பொறுப்பேற்றார்.
தேசிய தற்காப்புப் பயிற்சிக் கழகம், தற்காப்புச் சேவைகள் ஊழியர் கல்லூரி, தேசிய தற்காப்புக் கல்லூரி, விமானப் படை பயிற்சிக் கழகம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இவர், மிகவும் அனுபவம் வாய்ந்த போர் விமானி ஆவார். ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானம் ஓட்டி உள்ளார்.