புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி கடந்த சில நாள்களாக மாசடைந்த காற்றில் சிக்கித் திணறுகிறது. இதன்காரணமாக ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இணையம் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 50 விழுக்காடு அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில்,“காற்று மாசைக் குறைக்க, அரசாங்க ஊழியர்களில் 50 விழுக்காட்டினரை வீட்டிலிருந்தே வேலை செய்ய டெல்லி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்படும்,” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அரசு அலுவலகங்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரையும் மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் செயல்பட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதிகரிக்கும் காற்றுமாசால் மக்களுக்கு அதிகளவிலான சுவாசக்கோளாறு போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.