புதுடெல்லி: டெல்லி மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே போக வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு காற்றுமாசு மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது டெல்லியில் காற்று மாசு அபாய அளவைக் கடந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, டெல்லியின் 24 மணி நேர சராசரி காற்றுத்தரக் குறியீடு (AQI) நவம்பர் 9ஆம் தேதி 361ஆக இருந்தது. இது ‘மிகவும் மோசமான’ நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிலையை சிவப்பு மண்டலம் எனக் குறிப்பிடுவர்.
இதன் மூலம் சனிக்கிழமை இந்தியாவின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக மாறியது டெல்லி.
டெல்லியின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்குள்ள காற்றின் தரம் குறித்து தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தர அளவு 400 புள்ளிகளைக் கடந்துள்ளது.
38 நிலையங்களில் இருந்து பெற்ற தரவுகளின்படி நொய்டாவில் 354, கிரேட்டர் நொய்டா 336, காஸியாபாத் 339 புள்ளி பதிவானது.
இதனிடையே, டெல்லிக்கான காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் தகவல்படி, அடுத்த சில நாள்களுக்கு மாசுபாடு அளவு ‘மிகவும் மோசமான’ பிரிவில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க அளவில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், தீபாவளிக்குப் பிறகு அந்நகரத்தில் காற்றின் தரம் ‘மோசம்’ மற்றும் ‘மிகவும் மோசம்’ ஆகிய பிரிவுகளில் மாறிமாறி பதிவாகி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத டெல்லி அரசைக் கண்டித்து அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் ரேகா குப்தா அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஜேஎன்யு பல்கலை மாணவர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நீடிக்கும் எனத் தெரிவித்தனர்.
கைதான சில மாணவர்களையும் டெல்லிவாசிகளையும் காவல்துறை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றதாக மாணவர் பிரதிநிதிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

