இந்தியாவில் விரைவில் ‘ஏர் டாக்சி’: புது நிறுவனம் நம்பிக்கை

1 mins read
4edacad1-99d5-4577-afd8-e7c112b31959
 ‘ஏர் டாக்சி’ சேவை போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

மும்பை: இந்தியா முழுவதும் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ‘ஏர் டாக்சி’ சேவை தொடங்கப்படும் எனப் புதிய தொழில் நிறுவனமான ‘சரளா ஏவியேஷன்’ தெரிவித்துள்ளது.

விரைவில் சேவையைத் தொடங்குவதற்கான களச்சோதனைகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதையடுத்து, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘ஏர் டாக்சி’ சேவை இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நிறுவனங்கள் ‘ஏர் டாக்சி’ சேவையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றுள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனமான ‘சரளா ஏவியேஷ’னும் ஒன்று.

கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியில், ‘சூன்யா’ என்ற ‘ஏர் டாக்சி’ வடிவத்தை அறிமுகம் செய்த அந்நிறுவனம், தற்போது அடுத்த தலைமுறைக்கான விமானச் சேவைகளை மேம்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது என அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

தற்போது பெங்களூரில் உள்ள சோதனை மையத்தில் சூன்யா டாக்சி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தரையில் இருந்தபடி மேலெழும்புவது, தரையில் இறக்குவதற்கான களச்சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், தங்களுடைய இந்தத் திட்டம் முக்கிய மைல் கல்லை அடைந்துள்ளதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்நிறுவனம் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்