மும்பை: அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையேயான விமானக் கட்டணம் திடீர் சரிவைக் கண்டுள்ளது.
விசா வழங்குவதில் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள், நாடு கடத்தல், நிர்வாகம், குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளும் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில், இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், அந்நாட்டில் புதிய நடைமுறைகள் காரணமாக, ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மாணவர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோர், அங்கிருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவுக்கு வருவர். கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் இக்காலகட்டத்தில் அதிகரிக்கும்.
தற்பொழுது டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த ஆண்டு அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையேயான விமான முன்பதிவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல், மே மாதங்களில் டெல்லி - அமெரிக்கா பயணத்துக்கான விமானக்கட்டணம் 15% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு ஏப்ரல், ஜூன் மாதங்களில் இயக்கப்படும் விமானங்களுக்கான பயணக் கட்டணம் 8 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விமானக் கட்டணம் குறைந்திருந்ததாகவும் பயண நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.