லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து டெல்லிக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் திடீர் என்று கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் மேலே பறக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்த விமானத்தில் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 171 பயணிகளும் ஆறு விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
விமானத்தை மேலே பறக்கச் செய்யும் இயங்குவிசை சரிவர வேலை செய்யாததால் விமானி அந்த விமானம் மேலே பறக்காத வகையில் நிறுத்திவிட்டார்.
அந்தச் சம்பவம், லக்னோவின் சவுத்ரி சரண்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) முற்பகல் 11.10 மணியளவில் நிகழ்ந்தது.
டெல்லி நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் ஓடுதளத்தில் ஓடிக்கொண்டு இருந்தது. ஓடுதளப் பாதை முடிந்து வானை நோக்கி மேலே எழவேண்டிய நேரத்தில் அதன் விமானி கோளாறைக் கண்டுபிடித்தார்.
அந்த விமானம் பறக்கச் சிரமப்பட்டதை விமான நிலையத்தில் இருந்தவர்களும் விமான நிலைய அதிகாரிகளும் கண்டனர்.
நிலைமையை உணர்ந்த விமானி, விரைவாகச் செயல்பட்டு அவசர நிறுத்து விசையை அழுத்தி மெதுவாக அந்த விமானத்தைத் தரையிலேயே நிறுத்தினார்.
ஓடுதளப் பாதை முடிவதற்கு முன்னதாக விமானம் நின்றுவிட்டதால் பயணிகள் உள்ளிட்ட 177 பேரும் காயமின்றி உயிர்தப்பினர்.