புதுடெல்லி: தனியார் விமான நிறுவனங்களின் கட்டண உயர்வு, கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய விதிகள் அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பண்டிகைக் காலங்கள், விடுமுறை நாள்களில் தனியார் விமான நிறுவனங்கள் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்துவதாகச் சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், இலவச லக்கேஜ் அளவை 25 கிலோவிலிருந்து 15 கிலோவாகக் குறைத்து, கூடுதல் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுவதை சுரண்டல் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கட்டண முறைப்படுத்தலுக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா முன்னிலையாகி வாதிட்டார்.
அப்போது, விமானத் துறையைக் கட்டுப்படுத்தவும் கட்டண வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விதிகள் அனைத்தும் இன்னும் இரு வாரங்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, வெளியிடப்பட்ட புதிய விதிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விமான பயணக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு நியாயமான விலையில் சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
