தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதுகாப்பைவிட விளம்பரத்திற்கு விமான நிறுவனங்கள் அதிகச் செலவு: கருத்தாய்வு

2 mins read
38fb51fe-f89e-4ad6-993b-3affe1464eba
ஜூலை 12ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: பயணிகளின் பாதுகாப்பைவிட விளம்பரத்திற்கு இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்கள் அதிகம் செலவிடுவதாக விமானப் பயணிகளில் பெரும்பாலோர் கருதுவது புதிய கருத்தாய்வுமூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘லோக்கல் சர்க்கள்ஸ்’ என்ற நிறுவனம் நாடு முழுவதும் இணையம் வழியாகக் கருத்தாய்வை நடத்தியது.

அதில், 322 மாவட்டங்களைச் சேர்ந்த 44,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். அவர்களில் 76 விழுக்காட்டினர், விமானங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதைக் காட்டிலும் தங்களை விளம்பரப்படுத்துவதற்குப் பல விமான நிறுவனங்கள் கூடுதலாகச் செலவிடுவதாகக் கருதுகின்றனர்.

விளம்பரமும் பாதுகாப்பும் குறித்த கேள்விக்கு 26.696 பேர் பதிலளித்தனர். அவர்களில், 43 விழுக்காட்டினர் எல்லா விமான நிறுவனங்களும் விளம்பரத்திற்கு அதிகம் செலவிடுவதாகக் குறிப்பிட்டனர்; 33 விழுக்காட்டினர் சில நிறுவனங்கள் அவ்வாறு செய்வதாகக் கூறினர். 11 விழுக்காட்டினர் மட்டும் விமான நிறுவனங்கள் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தனர்.

அண்மையில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்தோரில் 241 பேரும் நிலத்திலிருந்த 19 பேரும் மாண்டுபோன நிலையில், இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மூவாண்டுகளில் நடுவானில் விமானம் ஆட்டங்கண்டது அல்லது அச்சமூட்டும் விமானப் பயண அனுபவம் குறித்து கேட்ட கேள்விக்கு 17,630 பேர் பதிலளித்தனர். அவர்களில் 75 விழுக்காட்டினர், பாதிக்கும் மேற்பட்ட முறை விமானப் புறப்பாட்டிலும் தரையிறங்குவதிலும் சிக்கல், நடுவானில் ஆட்டங்கண்டது போன்ற அனுபவங்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டனர். ஒட்டுமொத்தத்தில், கடந்த மூவாண்டுகளில் குறைந்தது ஒருமுறையேனும் அத்தகைய மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.

கருத்தாய்வில் பங்கெடுத்தோரில் 63 விழுக்காட்டினர் ஆண்கள், 37 விழுக்காட்டினர் பெண்கள்.

விமானப் போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையிலும் முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுவரும் நிலையிலும் தங்களின் பாதுகாப்பு குறித்து பயணிகள் கவலைப்படுவதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்