தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு விரைவுச்சாலைகளில் விமான ஓடுபாதைகள்: சாதனை படைத்த உ.பி.

2 mins read
e4fb5722-653d-4e1e-a03f-940ded13cdcd
இந்தியாவில் இரவில் போர் விமானங்கள் தரையிறங்கக்கூடிய முதல் விரைவுச்சாலை என்ற வரலாற்றுப் பெருமை கங்கா விரைவுச் சாலைக்கு கிடைத்துள்ளது. - படம்: ஊடகம்

லக்னோ: இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசத்தின் நான்கு விரைவுச்சாலைகளில் விமான ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள கங்கா விரைவுச்சாலையில் போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கென சிறப்பு ஓடுபாதை அமைக்கப்பட்டது. தற்போது அம்மாநிலத்தில் உள்ள நான்கு விரைவுச்சாலைகளில் நான்கு விமான ஓடுபாதைககள் அமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரவில் போர் விமானங்கள் தரையிறங்கக்கூடிய முதல் விரைவுச்சாலை என்ற வரலாற்றுப் பெருமை கங்கா விரைவுச்சாலைக்கு கிடைத்துள்ளது. போர்க்கால தயார்நிலை, பேரிடர் மீட்புக்கு இந்தத் திறன் மிகவும் முக்கியமானது என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஓடுபாதை பணிகளை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது வெறும் சாலை மட்டுமல்ல என்றும் வளர்ச்சிக்கான உயிர்நாடி என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இது தேசிய பாதுகாப்பிற்கான ஓடுபாதை என்றும் திரு யோகி வர்ணித்தார்.

மீரட், பிரயாக்ராஜ் ஆகிய இரு முக்கியமான பகுதிகளை இணைக்கும் 594 கிலோ மீட்டர் நீளமுள்ள பசுமைப் பாதை திட்டமான கங்கா விரைவுச்சாலையானது, நகரங்களையும் மக்களையும் இணைப்பது மட்டுமல்லாமல், வேகத்துடன் கூடிய நடவடிக்கை மற்றும் பாதுகாப்புமிக்க அம்சங்களையும் இணைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“விரைவுச் சாலையில் 3.2 கிலோ மீட்டருக்கு மேல் அமைக்கப்பட்டு வரும் இந்த விமான ஓடுபாதை, நவீன விவரக்குறிப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இந்திய விமானப்படை (IAF) போர் விமானங்களின் இரவு தரையிறக்கத்தை எளிதாக்கும் வகையில் மேம்பட்ட விளக்குகள் மற்றும் வழிசெலுத்தக் கூடிய அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும்.

“சாலை விமான ஓடுபாதையில் இரவு தரையிறக்கம் என்பது கடுமையான விவரக்குறிப்புகள் தேவைப்படும் ஒரு சிக்கலான பொறியியல் சவாலாகும்.

“மேலும் கங்கா விரைவுச்சாலை நாட்டில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கும் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று முதல்வரின் ஆலோசகரும் விரைவுச்சாலைத் திட்டங்களைக் கண்காணித்த முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்