கோல்கத்தா: இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட ஆகாசா ஏர் விமானம் கோல்கத்தாவில் தரையிறங்கியபோது, அதன் வால் பகுதி விமான ஓடுபாதையில் மோதிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
எனினும், பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றிப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த ‘போயிங்-737 மேக்ஸ்-8’ வகை ஆகாசா ஏர் விமானம் சனிக்கிழமை (அக்டோபர் 31) காலை 7.40 மணியளவில் கோல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தரையில் உரசியதை உணர்ந்த விமானி, உடனடியாக எச்சரிக்கையடைந்து விமானத்தை மீண்டும் மேலே பறக்க வைக்கும் ‘கோ-அரவுண்ட்’ நடைமுறையைச் செயல்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வான்வெளியில் வலம்வந்த அந்த விமானம், சிறிது நேரத்திற்குப் பிறகு கோல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதன்பின் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஆகாசா ஏர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான தொழில்நுட்ப ஆய்வின்போது, விமானத்தின் வால்பகுதி தரையில் உரசியது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த விமானம் தற்காலிகமாகச் சேவையிலிருந்து விலக்கப்பட்டு, விரிவான சோதனை, பராமரிப்புப் பணிகளுக்காகக் கோல்கத்தா விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்திற்குத் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
