‘எஸ்ஐஆர்’ தொடர்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக பெறப்பட்டவை: தேர்தல் ஆணையம் விளக்கம்

‘எஸ்ஐஆர்’ தொடர்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக பெறப்பட்டவை: தேர்தல் ஆணையம் விளக்கம்

கோப்புப் படம்: ஃப்ரன்ட்லைன்

27 Oct 2026 - 5:42 pm

2 mins read

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பான அனைத்து முக்கியமான முடிவுகளும் தேர்தல் ஆணையத்தின் அனைத்து ஆணையர்களின் ஒருமித்த ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்யக் கோரி ராகேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், மூன்று ஆணையர்கள் முறைப்படி கையெழுத்திட்ட பிறகே அனைத்து முடிவுகளும் தேர்தல் ஆணையச் செயலகத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை தொடர்பாக 2025 ஜூன், அக்டோபர் மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் முறைப்படி ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்றும் ஆணையத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் தயாரிக்கப்படும் கோப்புகள் முதலில் ஒரு தேர்தல் ஆணையருக்கும் தொடர்ந்து மற்றோர் ஆணையருக்கும் இறுதியாக தலைமைத் தேர்தல் ஆணையரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவெடுக்கும் நடைமுறையில் பரிமாறிக்கொள்ளப்படும் முதற்கட்ட கருத்துகள் 2023ஆம் ஆண்டு சட்டப்படி இறுதி முடிவாகக் கருதப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

எனவே, நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ‘படிவம்-6ல்’ (Form 6) எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்