வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அனைத்தும் சரிசெய்யப்படும்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அனைத்தும் சரிசெய்யப்படும்: தேர்தல் ஆணையம்

கோப்புப் படம்: நியூஸ் ஆன் ஏர்

15 Nov 2026 - 6:04 pm

2 mins read

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து முரண்பாடுகளும் சரிசெய்யப்பட்டு, தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் பெயரும் பட்டியலில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அவ்வப்போது சில சிக்கல்கள் எழுவது இயல்புதான். இருப்பினும் தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதையும் அதேசமயம் பட்டியலில் உள்ள பிழைகள் களையப்படுவதையும் ஆணையம் உறுதி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், எவ்வித அச்சமுமின்றி ‘படிவம் 6’ மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம் என ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

வேறு எந்தத் தொகுதியிலும் அவர்களின் பெயர் பதிவாகியிருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை உள்ளூர் மொழிகளில் மக்களிடம் பரப்புரை செய்ய மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இடம்பெயர்ந்தோர், இரட்டைப் பதிவு பிரிவில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் பெயர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகவரி மாறாத வாக்காளர்கள், உரிய விளக்கக் கடிதத்துடன் கையொப்பமிட்ட கணக்கெடுப்புப் படிவத்தை நேரிலோ, குடும்பத்தினர் மூலமாகவோ அல்லது உரிய இணையத்தளம் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.

கோடிக்கணக்கான வாக்காளர்கள், தரவுகள் மின்னிலக்கமயமாக்கப்படுவதால் சவால்கள் இருந்தாலும், தேர்தல் நடைமுறையின் தூய்மையையும் குடிமக்களின் வாக்குரிமையையும் பாதுகாப்பதே தனது கடமை எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்