புதுடெல்லி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இம்முறை அமோக வெற்றி பெறும் என்றும் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றிபெற்று தனித்து ஆட்சியமைக்கும் என அக்கட்சித் தலைமை தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால், பாஜக தரப்பில் கூட்டணி ஆட்சி குறித்து மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டுள்ள அமித்ஷா, கேரளா, பீகார், மேற்குவங்கம், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக அனைத்து இந்திய மொழிகளையும் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பொறியியல், மருத்துவத்தை தமிழில் கற்றுக்கொடுக்க தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழக மக்கள் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உறவினர்களுக்குச் சலுகை அளித்தல், குடும்பச் சண்டைகள் ஆகியவற்றால் சலித்துப் போயிருப்பதாக அவர் கூறினார்.
“தமிழகத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்பெறுவோம். நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சி செய்கிறோம்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அமித்ஷா.
அமித்ஷா பேட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நான் ஏற்கெனவே கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணி குறித்து அமித்ஷா சொல்வதே எங்களுக்கு வேதவாக்கு என்றும் அதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கூட்டணி, ஆட்சி குறித்து அதிமுகவும் பாஜகவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.