சென்னை: திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கிறது என்று பாமக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜனும் இதே போன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபையை ஆளுநர் ரவி அவமதித்துவிட்டதாகக் கூறி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் அத்துமீறி நடக்கும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கள்ளக் கூட்டணியையும் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறவேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர்.
இதற்கிடையே திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தரப்பில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து பாமக நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து பாமக போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் தற்போது திமுகவினர் நடத்திய போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.