சபரிமலை புனிதத்தைக் காக்க ஐயப்ப பக்தர்களுக்கு ஆந்திரா வேண்டுகோள்

சபரிமலை புனிதத்தைக் காக்க ஐயப்ப பக்தர்களுக்கு ஆந்திரா வேண்டுகோள்

கோப்புப்படம்: இண்டியன் எக்ஸ்பிரஸ்

15 Nov 2026 - 5:52 pm

2 mins read

விஜயவாடா: கேரள மாநிலம், சபரிமலையில் நடைபெறவுள்ள மண்டல, மகரவிளக்கு யாத்திரைக் காலத்தின்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களை அந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

2026-27ஆம் ஆண்டுக்கான யாத்திரைக் காலம் 2026ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி தொடங்கி, 2027ம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும்.

பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், யாத்திரைப் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பராமரிக்க உதவுமாறு கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வரும் பக்தர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முறையான கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆந்திர மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அது கடிதம் எழுதியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பக்தர்களுக்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை ஆந்திர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டது.

பக்தர்கள் தங்களது இருமுடியில் நெகிழிப் பொருள்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வனப் பாதைகள், மலைகள், சுற்றுப்புறப் பகுதிகளில் நெகிழி அல்லது இதர கழிவுகளை வீச வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஈரமான, உலர்ந்த கழிவுகளைப் பிரித்து, மக்கும் மற்றும் மக்காத கழிவுகளைத் தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் கழிவுகளைக் கொட்ட வேண்டாம் என்றும், ஆற்றிலும் பஸ்மகுளத்திலும் பயன்படுத்திய ஆடைகளை வீச வேண்டாம் என்றும் இரு வாரியங்களும் பக்தர்களைக் குறிப்பாகக் கேட்டுக்கொண்டுள்ளன.

அப்பகுதியின் பல்லுயிர்ச்சூழலையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்குச் சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தூய்மையைப் பராமரிப்பது அவசியம் என்று கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

சபரிமலையின் புனிதத்தைப் பேணிக்காக்கும் அதே வேளையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான ஆன்மிகப் பயணத்தை உறுதி செய்யுமாறு இரு வாரியங்களும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்