தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

2 mins read
5fb4b6fd-7bae-4534-91bc-19442618f94e
விஜயவாடாவில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்ட ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் 27 பேர் பலியாகினர்.

இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்களுடன் மின்சார கட்டமைப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல பாதைகள் மாற்றி விடப்பட்டுள்ளன.

ஆந்திராவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் விஜயவாடா நகரம் ஏரி போல காட்சி அளிக்கிறது. 40% நகரம் நீரில் மூழ்கியுள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் பகுதியில் மழை கொட்டியுள்ளது.

ஆந்திரா வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் 110 விசைப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நிலவரங்களையும் பொருட்படுத்தாமல் விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் வெள்ளப் பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

வெள்ள நெருக்கடியைச் சமாளிக்க விசைப் படகுகள், கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டார்.

விஜயவாடாவில் மட்டும் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திரா மழை வெள்ளத்தால் இதுவரை 1,11,259 ஹெக்டர் அளவிலான வேளாண் பயிர்களும், 7,360 ஹெக்டர் அளவிலான தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை 28.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  

மழை, வெள்ளம் காரணமாக தெற்கு மத்திய ரயில்வே 140 ரயில்களை ரத்து செய்துள்ளது, 97 ரயில்கள் திருப்பிவிட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 6,000 பயணிகள் பல்வேறு ரயில் நிலையங்களில் சிக்கியுள்ளனர்.

தெலுங்கானாவில் தேர்வுகள் ரத்து

கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா முழுவதும் உள்ள 115க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இரு மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்