புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் மிலன் பூங்கா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) மாலை 6.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பழைய ஒற்றை மாடிக் கட்டடத்தின் மீது மேலும் ஒரு தளத்தைக் கட்டும் பணி நடைபெற்று வந்தபோது, புதிதாகப் போடப்பட்ட கான்கிரீட் தளத்தின் எடையைத் தாங்க முடியாமல் கீழ்த்தளமும் சேர்ந்து இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவலறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை, குடிமைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
குறுகலான, நெரிசல் நிறைந்த பகுதி என்பதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
டெல்லி அமைச்சர்கள் கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட் நேரில் சென்று மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை அறிய தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
