மீண்டும் விண்வெளிப் பயணம்: சுபான்ஷூ சுக்லா ஊக்கம்

1 mins read
40840b51-93ff-4c06-9dae-5361a1fa4a0e
சுபான்ஷூ சுக்லா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: முதல் முறையாக பூமியை விட்டு வெளியேறியபோது, ஈர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தனது விண்வெளிப் பயணம் குறித்து சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

“திடீரென்று புவி ஈர்ப்பு விசை மாயமானது. ஈர்ப்பு விசை அறவே இல்லாத சூழலில், மனித உடல் அதற்கேற்ப மாறுவதற்கு நேரம் எடுக்கும். விண்வெளியில் இருந்து திரும்பி வரும்போதும் அதேபோல் நடக்கும்.

“எனது கைப்பேசிகூட கனமான பொருளாக இருந்தது. விண்வெளியில் மனித உடல் எடையை எவ்வாறு நிர்வகிப்பது, நிலைப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“நான்கு நாள்களுக்குள் பூமியில் இருந்து சென்றவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினோம்,” என்று சுபான்ஷூ சுக்லா கூறியுள்ளார்.

விண்வெளியில் எல்லாமே மிதப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு சில சோதனைகளை மேற்கொண்டபோது நல்ல முடிவுகள் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

“சோதனையின்போது கிடைத்த நல்ல முடிவுகள் ஊக்கமளித்தன. இந்தப் பயணத்தின்போது சேகரிக்கப்பட்ட அறிவியல் மாதிரிகள், தரவுகள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

“விண்வெளி, அறிவியல், மருத்துவத்தை முன்னேற்றுவதில் இந்தப் பயணத்தின் பங்களிப்பை வலியுறுத்தி, கண்டுபிடிப்புகள் குறித்து விரைவில் விரிவாக விவாதிக்க ஆவலுடன் இருக்கிறேன்,” என்று சுபான்ஷூ சுக்லா தமது பேட்டியில் கூறியுள்ளார்.

தாம் தற்போது சாதாரணமாக உணர்வதாகவும் மற்றொரு விண்வெளிப் பயணத்திற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்