புதுடெல்லி: பிலிப்பீன்சில் நடந்த 7வது ஆசியான் மற்றும் தனிநபர் ஓபன் செஸ் வெற்றிக்கிண்ணத் தொடரில் வெற்றி பெற்று, 22 வயது அனுஜ் ஸ்ரீவாத்ரி, இந்தியாவின் 100வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மத்தியப் பிரதேசத்திலிருந்து உருவான முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 1988ல், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராகி செஸ் உலகின் உச்சத்தை எட்டினார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கிராண்ட்மாஸ்டர் எண்ணிக்கையில் 100வது கிராண்ட்மாஸ்டரை அடைந்து இந்திய செஸ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ரயில்வே ஆசிரியரான தந்தை அசோக் குமார், அரசுப் பள்ளி ஆசிரியை தாய் மனோரமா ஆகியோரின் ஆதரவுடன் 5-6 வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார் அனுஜ். இவரது மூத்த சகோதரர் தற்போது பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார்.
2019ல் அனைத்துலக மாஸ்டர் பட்டம் பெற்றார். கணினி அறிவியலில் பட்டக்கல்வியை முடித்த அவர், கிராண்ட்மாஸ்டர் கனவிற்காக வந்த வேலை வாய்ப்பை நிராகரித்தார்.
வெளிநாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான ஒரு லட்சம் ரூபாய் வரையிலான செலவுகளைப் பயிற்சி அளித்தும் ரேபிட் போட்டிகளில் வென்றும் சமாளித்தார்.
4-5 முறை நழுவிய இப்பட்டம் கிடைத்திருப்பது பெரும் நிம்மதியளிப்பதாகக் கூறியுள்ள அனுஜ், அடுத்து 2600 ரேட்டிங் புள்ளிகளைக் கடப்பதே இலக்கு என்றார்.
