சபரிமலை யாத்திரை ஒருங்கிணைக்க தமிழ் உட்பட 6 மொழிகளில் செயலி அறிமுகம்

சபரிமலை யாத்திரை ஒருங்கிணைக்க தமிழ் உட்பட 6 மொழிகளில் செயலி அறிமுகம்

முன்பதிவு, போக்குவரத்து தகவல்களை ஆறு மொழிகளில் வழங்கும் இலவச இணையச் செயலி
படம்: தென்தமிழ்

11 Nov 2026 - 8:29 pm

2 mins read

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு யாத்திரைப் பருவத்தை முன்னிட்டு, பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஆறு மொழிகளில் புதிய இணையச் செயலி (portal) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை நடை இம்மாதம் 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு, 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் தொடங்கவுள்ளன. இதையொட்டி, பயணிகள் அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள sabariportaldcpta.in என்ற புதிய இணைய முகவரி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளில் கைப்பேசியிலும் கணினியிலும் இயங்கும் வண்ணம் ‘க்யூஆர்’ (QR) குறியீட்டுடன் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நிசாமுதீன் தெரிவித்தார். அத்துடன் ‘வாட்ஸ்அப் சாட்போட்’ சேவையும் இணைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தளம் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கான இணைய முன்பதிவை மேற்கொள்வதோடு, வாகன நிறுத்துமிடம், ரயில், பேருந்து போக்குவரத்து விவரங்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்கள் அல்லது தவறவிட்ட உடமைகள் குறித்த விவரங்களையும் இதில் பதிவிட்டு உடனடி உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த வசதிகள் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலைக்குப் புறப்படுவதற்கு முன்பே sabarimaonline.org தளம் அல்லது செயலி வழியாக இலவச ‘மெய்நிகர் வரிசை’ முன்பதிவு செய்வது அவசியம். ஐந்து வயதுக்குட்பட்டோருக்கு விலக்கு உண்டு. கடப்பிதழ், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளைப் பயன்படுத்திப் பதியலாம். முன்பதிவுக்குக் கட்டணம் இல்லை

கைப்பேசிக்கு வரும் ‘கியூஆர்’ குறியீட்டுடன், பயன்படுத்திய அசல் அடையாள அட்டையையும் பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்லும்போது சமர்ப்பிக்க வேண்டும். பம்பை உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் காவல்துறையினர் அந்தக் குறியீட்டை சரிபார்ப்பார்கள் என்று தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்