புதுடெல்லி: இந்தியாவில் ஆக அதிகமாக விற்கப்பட்ட முன்னணி நிறுவனங்களின் திறன்பேசிகளில் ஐஃபோன் முதலிடம் பிடித்து உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்து உள்ளார்.
அந்தக் காலாண்டில், கிட்டத்தட்ட 10 விழுக்காட்டு சந்தைப் பங்கைப் பெற்று ஐஃபோன் முதல்முறை இந்தியாவின் முதல் ஐந்து திறன்பேசி நிறுவனங்களில் ஒன்றாக நுழைந்துள்ளது.
அது குறித்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) தெரிவித்த திரு குக், 2024 “அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி திறன்பேசிகளில் முதலிடத்தை ஐஃபோன் பிடித்து உள்ளது. மேலும், உலகளவில் ஆகப்பெரிய திறன்பேசிச் சந்தையில் அது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.
“ஆப்பிள் தயாரிப்பு கணினிகளும் மடிக்கணினிகளும் உலகளவில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளன. இதன் மூலம் உலகச் சந்தைகளில் சிறந்ததொரு இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது,” என்று கூறினார்.
இந்தியாவில் முதல்முறையாக ஐஃபோன் விற்பனை முதலிடத்தை பிடித்திருப்பதாக பகுப்பாய்வாளர்கள் கூறினர்.
குறிப்பாக, அந்த மூன்று மாதங்களில் ஐஃபோன் 15 வகை திறன்பேசி இந்தியாவில் ஆக அதிகமாக விற்கப்பட்டதாக ‘கவுண்டர்பாய்ண்ட் ரிசர்ச்’ (Counterpoint Research) என்னும் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் தருண் பதக் தெரிவித்துள்ளார்.
“ஆப்பிள் நிறுவனத்தின் ‘பிராண்ட்’ மதிப்பு, இந்தியாவில் இளம் நுகர்வோரின், குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்களில் உள்ளோரின் தெரிவாக மாறியுள்ளது,” என்றார் அவர்.