புதுடெல்லி: சமூக ஊடகங்கள் வழி குறுகிய காலத்தில் லட்சக்கணக்கானோரைச் சென்றடைந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முறைப்படி அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான, ஹரியானாவைச் சேர்ந்த 35 வயது சுதீர் ஜாக்கர், தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.
இந்தியா முழுவதும் தங்கள் கட்சியுடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீர் குறிப்பிட்டார்.
எனவே, மின்னிலக்க அமைப்பாக உருவெடுத்துள்ள தங்கள் கட்சிக்கு முறையான அரசியல் தளம் வழங்கப்பட வேண்டும் என்றும் இதற்கு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கத்தை உருவாக்கிய அபிஜித் தீப்கே, தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் எப்போது நாடு திரும்புவார் எனத் தெரியாது என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் சுதீர் கூறியுள்ளார்.

