அகமதாபாத்: குஜராத் மாநில வெள்ளத்தில் சிக்கிய 57 பேரை இந்திய ராணுவ வீரர்கள் சனிக்கிழமை (ஜூலை 25) மீட்டனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நவசாரி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த அவர்களை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அகமதாபாத், சூரத், அம்ரிலி, வல்சாத், நவசாரி உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏராளமான மக்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குறிப்பாக, வடக்கு, தெற்கு குஜராத், சௌராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை இன்னும் நின்றபாடில்லை. அகமதாபாத் நகரில் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து தடைபட்டது. அதிகப்படியான நீர்வரத்து காரணமாக அகமதாபாத்-விராம்கம் நெடுஞ்சாலை பாதுகாப்பற்றதாக மாறியது.
அதனைத் தொடர்ந்து, அந்தச் சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அகமதாபாத் மாவட்ட காவல்துறை அறிவித்தது.
இதற்கிடையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் மதுபன் அணைப் பகுதியில் உள்ள சந்தூரி கிராமத்திலும் தத்தளித்த மக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த அவசர அழைப்புகளைத் தொடர்ந்து, ராணுவத்தின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையின்கீழ் மீட்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன.

