ஆந்திராவை அச்சுறுத்தும் ‘அர்னாப்’ புயல்: தயார் நிலையில் மாநில அரசு

ஆந்திராவை அச்சுறுத்தும் ‘அர்னாப்’ புயல்: தயார் நிலையில் மாநில அரசு

படம்: தினமலர்

27 Oct 2026 - 8:10 pm

2 mins read

அமராவதி: வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், மிகத் தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெற்றுள்ளதை அடுத்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நிலைமையை எதிர்கொள்ள மாநில அரசு ரூ.27 கோடி நிதியை அவசரகால நிவாரணத்துக்காக விடுவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, இந்தப் புயல் பாபட்லா, விசாகப்பட்டினத்திற்கு இடையே, யானம் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கடலோர ஆந்திரா, யானம் பகுதிகளில் அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் மிகக் கடுமையான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்திருந்தது.

புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 20 மாவட்டங்களுக்கு நிவாரண நிதியை ஆந்திர மாநில அரசு உடனடியாகப் பகிர்ந்தளித்துள்ளது.

மீட்புப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள் தயார் நிலையில் களமிறக்கப்பட்டுள்ளன.

மேலும், மரங்களை அகற்றும் 115 குழுக்கள், 13 படகு மீட்புக் குழுக்கள், 853 உயிர்காக்கும் மிதவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மக்களைப் பாதுகாப்பான மறுவாழ்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யவும், குடிநீர், உணவு, பால் விநியோகம், அவசர மருத்துவ முகாம்களைச் சீராக நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரயில், விமானச் சேவைகள் ரத்து

ஆந்திரப் பிரதேசத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் ரயில், விமானச் சேவைகள் ரத்தாகின.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், விசாகப்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்ததை அடுத்து, ஒடிசாவிலும் பலத்த மழை பெய்தது.

ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் ‘அர்னாப்’ புயலின் தாக்கத்தைப் பார்க்க முடிந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்