புதுடெல்லி: இந்தியா எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துகொள்ள வகைசெய்யும் நோக்குடன் வரையப்பட்டுள்ள சமுத்திர மந்தன் திட்டத்தை ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாகச் செயல்படுத்துவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசாங்கம் இறுதிப்படுத்தவுள்ளது.
திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு அருகே உள்ள பகுதிகளில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் கண்டெடுப்பதற்கான ஆய்வுகளை நடத்துவது இலக்காகும்.
திட்டமிடல் அமர்வுகள்
திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து குருகிராம், துலியாஜன் ஆகிய நகரங்களில் இரண்டு திட்டமிடல் அமர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் புரி அண்மையில் பரிசீலித்ததாக அதிகாரிகள் கூறினர்.
சமுத்திர மந்தன் திட்டத்துக்குச் சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் கட்டங்கட்டமாகத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கிரிஷ்ணா-கோதாவரி, மகாநதி, காவிரி ஆறுகளில் ஆய்வு, தயாரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக மேற்கொள்ள வகைசெய்வதோடு நிதி சீராகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நிலத்தடிச் செயல்பாட்டுப் புள்ளிவிவரங்கள் (seismic data), நிலத்தடியில் வளங்களைக் கண்டெடுப்பதற்கான தோண்டும் பணிகள் போன்றவற்றுக்கு சமுத்திர மந்தன் திட்டம் நிதி ஆதரவு அளிக்கும்.
பணிகள்
ஐந்தாண்டுகளில் கடலின் நிலத்தடியில் தோண்டுவதற்காக 60 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கான பணிகளுக்கு ரூ. 43,200 கோடி (5.75 பில்லியன் வெள்ளி) ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இருவகை நிலத்தடிச் செயல்பாடுகளுக்கான புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கு ரூ. 28,534 கோடியும் பொதுவான உள்கட்டமைப்பு மையங்களை அமைக்க ரூ. 10,000 கோடியும் எண்ணெய், எரிவாயு தயாரிப்பு மற்றும் சேவைப் பகுதியை உருவாக்க ரூ. 2,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவுக்கு ஏறத்தாழ 256 மில்லியன் டன் அளவு கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 88 விழுக்காட்டு எண்ணெய் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தேவை அதிகரிக்கும் நிலையிலும் உள்ளூரில் உற்பத்தி குறைந்துவருகிறது. அதனால், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ளவும் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


