லக்னோ: செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துவரும் வேளையில், உண்மையான திறன் கொண்ட பணியாளர்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் யாராலும் பறிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் நடைபெற்ற ஐந்தாவது தேசியத் திறன் பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.
அப்போது, வெறும் காகிதச் சான்றிதழ்களைக் காட்டிலும் செயல்முறைத் திறன்களுக்கே இனி உலகளவில் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு வந்த படையெடுப்பாளர்கள் முதலில் தாக்கியது அங்குள்ள கைவினைத் திறன்களையே என்றும் மெக்காலே கல்விமுறைத் திறன் சார்ந்த கல்வியை மாற்றியமைத்ததாகவும் பிரதமர் விமர்சித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 5,000 புதிய ஐடிஐ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு காலத்தில் கைப்பேசிகளை இறக்குமதி செய்த இந்தியா இன்று பெண்கள் மூலம் அவற்றைத் தயாரித்து ஏற்றுமதி செய்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான இளையர்களுக்குத் திறன்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா, துபாய், அபுதாபி, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வளர்ச்சியில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிப்பதாக அந்நாட்டு அரச குடும்பத்தினர் கூறியதை மோடி நினைவுகூர்ந்தார்.
மேலும், கிரேட்டர் நொய்டாவில் 2027ஆம் ஆண்டில் உலகத் திறன் போட்டியை இந்தியா நடத்தும் என்றும் இளையர்கள் பெரிய கனவுகளுடன் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
