ஜெய்ப்பூர்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் செயற்கை மழையை வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் குடிநீர் தேவைக்காக, ராம்கர் பகுதியில் 15.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த ஓர் ஏரியின் அருகே அணை கட்டப்பட்டது.
இது ஜெய்ப்பூர் மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. கடந்த 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்த ஏரியில் படகுப் போட்டிகள் நடத்தும் அளவுக்குத் தண்ணீர் நிரம்பியிருந்தது.
தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதுதான் சோகம். ஏரியும் அணையும் நீர் இல்லாமல் வறண்டு காய்ந்துபோய் கிடக்கின்றன. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளே இதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஏரிக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் மாயமாகின. இதனால் 1999ஆம் ஆண்டுக்குப் பின் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனது.
இந்நிலையில், அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மாநில அரசுக்கு நம்பிக்கையூட்டி உள்ளன.
ராம்நகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செயற்கை மழை பெய்ய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதில் ஓரளவு பலன் கிடைத்தது. பின்னர், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வின்போது, செயற்கை மழை பொழிவதற்காக விதைகளை இம்முறை ‘டிரோன்’கள் மூலம் தூவினர். இதற்கு ‘ஏஐ’ தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது.
‘ஏஐ’ தொழில்நுட்பத்தைக் கொண்டு, எத்தகைய வேதிப்பொருள்களை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, ராஜஸ்தான் மாநில வேளாண் அமைச்சர் மருத்துவர் கிரோடி லால் மீனா முன்னிலையில், 2,600 அடி உயரத்துக்கு டிரோன்களைப் பறக்கவிட்டு, செயற்கை மழைக்கான விதைகள் தூவப்பட்டன.
முதல் முயற்சியிலேயே ராம்நகர் ஏரி அணைக்கு அருகேயுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், 0.08 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது என்றும் செயற்கை மழைப்பொழிவு சாத்தியம் என்பதைக் கண்கூடாகப் பார்த்ததாகவும் அமைச்சர் கிரோடி லால் மீனா கூறினார்.