கெயி பன்யோர் (அருணாச்சலப் பிரதேசம்): அருணாச்சலப் பிரதேசத்தின் கெயி பன்யோர் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் ஆகாயவழி எடுக்கப்படும் ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்வோரை புதன்கிழமை (ஜூன் 24) பணியில் ஈடுபடுத்தியது
.அதோடு, இந்திய ஆகாயப்படையுடன் இணைந்து செயல்பட்டு மீட்பு, நிவாரணப் பணிகளை மாநில அரசாங்கம் தொடங்கியது. மாநிலப் பேரிடர் நடவடிக்கைப் படையையும் தேவையான சாதனங்களையும் விரைவில் களமிறக்கும் முயற்சி மாநில அரசாங்கம் மேற்கொண்டது.
பூசா பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தவுடன் அருணாச்சலப் பிரதேசத்துக்கான பொது விமானத்துறைப் பிரிவு உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்று அந்த மாநிலத்துக்கான தகவல், பொதுத் தொடர்புகள் பிரிவு தெரிவித்தது. மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொது விமானத்துறைப் பிரிவு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் மீட்பு, நிவாரணப் பணிகள் தொடரும் வேளையில் கூடுதல் ஆகாயவழி ஆதரவு நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நெருக்கடி காலத்தில் உடனடியாக ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இந்திய ஆகாயப்படை, மாநிலப் பேரிடர் நடவடிக்கைப் படை உள்ளிட்டவற்றுக்கு சிவில் விமானத்துறைப் பிரிவும் பேரிடர் நிர்வாகப் பிரிவும் நன்றி தெரிவித்துக்கொண்டன.

