கௌகாத்தி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அசாம் அரசாங்கம் தொடர்ந்து நிதியுதவிகளை வழங்கிவருகிறது.
அசாம் மாநில அமைச்சர் பிமல் போரா ஞாயிற்றுக்கிழமை (மே 25) கர்நாடகாவில் இறந்தோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்தார்.
ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் இறந்த 26 பேரின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாநில அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குகிறது.
ஷிவமொக்கா என்ற பகுதியில் வசிக்கும் கொல்லப்பட்ட மஞ்சுநாத் ராவின் மனைவி பல்லவி என்பவருக்கும் திரு போரா காசோலையை வழங்கினார்.
மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா, மஞ்சுநாத்தின் குடும்பம் ஈடுசெய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டு வரும் வேளையில் தங்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் தருவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் மாண்டோரின் குடும்பங்களுடன் அசாம் அரசாங்கம் துணை நிற்பதாகவும் திரு போரா சொன்னார்.
பெங்களூரில் உள்ள பாரத் புசான் என்ற ஆடவரின் குடும்பத்தையும் திரு போரா சென்று சந்தித்தார்.
அசாம் அமைச்சர்கள் நாடெங்கும் உள்ள மாண்டோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.