புதுடெல்லி/மும்பை: ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 13 செய்தியாளர்களை ஒன்றுதிரட்டிய ஐந்தாவது ஆசியான் - இந்தியா செய்தியாளர் பரிமாற்றத் திட்டம் 2024, டிசம்பர் 4ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவேறியது.
இந்தியாவின் துடிப்புமிக்க பெருநகர்களான புதுடெல்லி, மும்பை இவ்விரண்டுக்கும் காதல் சின்னமான தாஜ்மகாலுக்குப் பெயர்போன ஆக்ராவுக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, கம்போடியா, மியன்மார், வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய ஏழு தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களில் பெரும்பாலோர் இந்தியாவுக்குச் சென்றது இதுவே முதன்முறை.
இந்தியாவின் வளமையான, பன்முகம் கொண்ட கலாசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி, உள்ளூர்வாசிகளுடன் உரையாடி, இந்தியாவின் உண்மையான சாரத்தை அனுபவிக்க இந்த ஒருவார பயணம் நல்வாய்ப்பாக அமைந்தது.
இந்திய ஜனநாயகத்தின் இதயமான டெல்லியில் வெளியுறவு அமைச்சு, வணிக, தொழில் அமைச்சு, அறிவியல், தொழில்நுட்பத் துறை வளாகங்களில் அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்களைச் சந்தித்து செய்தியாளர்கள் உரையாடினர்.
இந்தியாவின் முன்னணி பல்லூடகச் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஷியன் நியூஸ் இன்டர்நேஷனலுக்குச் (ஏஎன்ஐ) சென்று, பரபரப்பான செய்தி அறையில் ஊடகவியலாளர்கள் இயங்குவதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.
நடப்பு விவகாரம், அரசியல், திரைச்செய்தி, வாழ்வும் வளமும், விளையாட்டு, சமுதாய விவகாரம் எனக் கிட்டத்தட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஏஎன்ஐ உடனுக்குடன் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது.
அனைத்துலக சூரியசக்திக் கூட்டமைப்பு
டெல்லி அருகே குருகிராமில் அமைந்துள்ள அனைத்துலக சூரியசக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance) தலைமையகத்துக்குச் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக அரசாங்கங்களுக்கு இடையேயான கூட்டமைப்பான இது, பேரளவிலான சூரியசக்தியைச் செயல்படுத்த 2030க்குள் தேவைப்படும் US$1,000 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2015 நவம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரெஞ்சு அதிபர் ஃபிரன்சுவா ஹோலாண்ட் என்ற இரு தலைவர்களால் அமைக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பின் இலக்கு, சூரியசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதே.
தாஜ்மகால்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குச் சென்றதே இந்தப் பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
14வது குழந்தையை ஈன்றெடுத்தபோது இறந்த தன் அன்பு மனைவி மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முகலாயப் பேரரசர் ஷாஜகான் எழுப்பிய அற்புதக் கட்டடமே தாஜ்மகால். இறந்த பிறகு தம் மனைவிக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார் ஷாஜகான்.
17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால், ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. அதிசயிக்கும் வகையிலான இந்த நினைவுச்சின்னம், செங்கற்கள், சிவப்பு மணற்கற்கள், வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. சிக்கலான வலைப்பின்னல் அலங்காரத்திற்கு பெயர்பெற்ற தாஜ்மகால், இன்றளவும் இந்தியாவுக்குப் பேரளவில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் தலமாக விளங்குகிறது.
தாஜ்மகாலின் இந்தோ-இஸ்லாமிய கட்டடக் கலை, செய்தியாளர்களைப் பிரமிக்க வைத்ததுடன், அவர்கள்மீது ஒரு நிலையான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
எலிஃபெண்டா குகைகள்
மும்பையில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டைய இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான எலிஃபெண்டா தீவில் உள்ள எலிஃபெண்டா குகைகளைச் செய்தியாளர்கள் ஆராய்ந்தனர். 1987l யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலமாக அறிவிக்கப்பட்ட இவை, இந்தியாவின் ஆன்மிக, பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய மறக்க முடியாத பார்வையைச் செய்தியாளர்களுக்கு வழங்கின.
மும்பை ஃபிலிம் சிட்டி
இந்தியாவின் ஆகப்பெரிய படப்பிடிப்புத் தள வளாகமான ‘தாதா சாகேப் பால்கே சித்ரா நகரி’, அல்லது பலரும் அறிந்த ‘மும்பை ஃபிலிம் சிட்டி’க்கும் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தியாவின் செழித்தோங்கும் திரைத்துறையில், திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளைக் காணும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
1977ல் மகாராஷ்டிர அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஃபிலிம் சிட்டி, ‘இந்தியத் திரைத்துறையின் தந்தை’ என்று அன்புடன் அழைக்கப்படும் மூத்த நடிகர் தாதா சாகேப் பால்கேயால் கற்பனை செய்யப்பட்டது.
இந்தியாவின் நவீன பொருளியலுக்கு முக்கியப் பங்காற்றிவரும் சில இடங்களுக்கும் செய்தியாளர்கள் சென்றனர்.
கப்பல் கட்டுமானத் தளம்
போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், சுற்றுக்காவல் படகு எனப் பலவகை கப்பல்களைக் கட்டி, பழுதுபார்க்கும் பணிகளைச் செய்யும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்’ நிறுவனமும் அவற்றில் ஒன்று.
தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியக் கடற்படைக்கும் கடலோரக் காவல்படைக்கும் கப்பல்களைக் கட்டித்தரும் இந்நிறுவனம், 1960ல் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது முதல், 28 போர்க்கப்பல்கள், ஏழு நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 802 கப்பல்களைக் கட்டி வழங்கியுள்ளதாக அதன் இணையப்பக்கம் குறிப்பிடுகிறது.
மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை, இந்தியாவின் மிகப்பெரிய, ஆசியாவின் மிகப் பழைமையான பங்குச் சந்தையாகும். 1875ல் தொடங்கப்பட்ட இது, அடுத்த ஆண்டு அதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநரும் அதன் தலைமை நிர்வாகியுமான சுந்தரராமன் ராமமூர்த்தியைச் சந்தித்து, மும்பை பங்குச் சந்தையின் வரலாறு, அதன் செயல்பாடுகள், வளர்ச்சிப் பாதை குறித்து நேரடியாக அறியும் வாய்ப்பு செய்தியாளர்களுக்குக் கிடைத்தது.
இந்திய தேசிய கட்டணக் கழகம்
இந்திய தேசிய கட்டணக் கழகம் (National Payments Corporation of India), இந்தியாவின் அனைத்து சில்லறைக் கட்டணச் சேவைகளுக்கும் மைய நிறுவனமாக விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரும் எவ்விடத்திலிருந்தும் எந்நேரத்திலும் மின்னணு முறையில் கட்டணங்களைச் செலுத்த வகைசெய்வதே இதன் இலக்கு.
இக்கழகம் மாதந்தோறும் 17 பில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகளைக் கையாள்கிறது. கழகத்தின் பணிகள், இந்தியாவில் இணையவழிக் கட்டண முறையின் உருமாற்றம் குறித்து அதன் மேலாண்மை இயக்குநரும் அதன் தலைமை நிர்வாகியுமான திலிப் அஸ்பே செய்தியாளர்களிடம் விளக்கினார்.
திட்டத்தின் நோக்கம்
இந்திய வெளியுறவு அமைச்சால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ஆசியான் - இந்தியா செய்தியாளர் பரிமாற்றத் திட்டம், ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பலதரப்புக் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதையும் தகவல் பகிர்வு மூலம் வட்டாரத்தில் ஆற்றலைக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1992க்குப் பின்னோக்கிச் செல்லும் ஆசியான் - இந்தியா உறவு, 2022 நவம்பரில் விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவம் கையெழுத்தானவுடன் மேலும் சிறந்தோங்கியது. அந்த நிகழ்வு, இந்தியா - ஆசியான் உறவின் புதிய அத்தியாயத்தைக் குறித்தது.
கண்திறப்பாக அமைந்த பயணம்
தமிழ் முரசு உதவி ஆசிரியரான நான், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இந்தப் பயணத்தில் பங்கெடுக்க முடிந்ததை அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
இதுவரை வடஇந்தியாவுக்குச் செல்லாத எனக்கு, இப்பயணம் நிச்சயமாக ஒரு கண்திறப்பாக அமைந்தது. இந்தியத் தலைநகரான புதுடெல்லி, நிதி மையமான மும்பை, வானுயர்க் கட்டடங்கள், இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிரா, உலக அதிசயத்தைத் தன்னுள் கொண்டு பண்பாட்டு நடுவமாகத் திகழும் ஆக்ரா - இவற்றையெல்லாம் பற்றி செய்திகளில் படித்து அறிந்துள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
இனி இந்தியா குறித்த செய்திகளைத் தெளிவுடனும் நல்ல புரிதலுடனும் எழுதுவதற்கு இப்பயணம் துணைசெய்யும்.
வியட்னாமைச் சேர்ந்த நுயென் தி து ஹியென், இந்தியப் பயணம் உவகை தருவதாகப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் பன்முகக் கலாசாரத்தை ஆராய்ந்து, ஆசியான் சகாக்களுடன் உறவாடும் வாய்ப்பை இப்பயணம் தந்ததாக அவர் கூறினார்.
இந்தோனீசியப் பங்கேற்பாளரான தௌஃபீக் ரவுஃப், “இந்தப் பயணம் நிச்சயமாக பலன்தரும் ஒன்றாக உள்ளது. ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்து, இந்தியாவின் பெருமை எனக் கருதப்படும் அம்சங்களைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது,” என்றார்.