கௌஹாத்தி: சிறிய வகை பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள காசிரங்கா தேசியப் பூங்கா அருகே உள்ள ராங்கஜன் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
போகாகாட் பகுதியிலிருந்து 45 மாணவர்களை ஏற்றிக்கொண்டு அந்தச் சிறிய பேருந்து நகோவானை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாகப் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இரு வாகனங்களும் அதிவேகத்தில் மோதியதால், பேருந்து முற்றிலுமாக உருக்குலைந்து நொறுங்கியது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்தக் கோர விபத்தில் 26 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 20 மாணவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கோலாகாட் பகுதி மூத்த காவல் கண்காணிப்பாளர் சுவப்னாநீல் தேகா உறுதிசெய்தார்.
இதனிடையே, காசிரங்கா பூங்கா அருகே நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
