கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் மழை, வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஏறக்குறைய 7.27 லட்சம் பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு, நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். மொத்தம் 25 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த ஆணையம் குறிப்பிட்டது.
நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் ‘ஆப்பரேஷன் ஜல்ரகாத்’ என்ற சிறப்பு நடவடிக்கையை இந்திய ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது என்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்தார்.
அசாம் மாநிலம் முழுவதும் 469 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஏறக்குறைய 18,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் காணப்படுவதால் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் 30க்கும் மேற்ப்பட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மேலும் சில நாள்கள் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையடுத்து, அம்மாநில அரசு முழுவீச்சில் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், பீகார், சத்திஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், சில மாநிலங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அசாமில் நிலவும் வெள்ள நிலைமை குறித்த சேதத்தின் அளவை மதிப்பிட மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு விரைவில் மாநிலத்திற்கு வருகைதரும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்.

