அசாம் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

அசாம் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

1 mins read
3f0e15d1-988f-4241-8492-0f583da7b69e
12 வருவாய் வட்டங்களையும் 99 கிராமங்களையும் வெள்ளம் மூழ்கடித்துள்ளது எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. - படம்: என்டிடிவி

கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்தது.

ஏறக்குறைய 37,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சோனித்பூர் மாவட்டத்தில் இருந்து 14 பேரை மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வெள்ளத்தால் 37,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லக்கிம்பூர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது,” என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோனித்பூர், திப்ருகர், லக்கிம்பூர், தேமாஜி, ஜோர்ஹாட், சிவசாகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்றும் 12 வருவாய் வட்டங்களையும் 99 கிராமங்களையும் வெள்ளம் மூழ்கடித்துள்ளது என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 20 நிவாரண விநியோக மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அரசு அதிகாரி தெரிவித்தார்.

அசாமில் மழை, வெள்ளத்தால் 1,103 ஹெக்டர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது என்றும் இரண்டு கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 16,139 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அசாம்மழைவெள்ளம்உயிரிழப்பு