புதுடெல்லி: அசாம் முதல்வரின் சிறப்புக் கண்காணிப்புப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அரசாங்க அதிகாரி நுபுர் போரா வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக ஆளும் அசாமில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அசாம் குடிமைத்துறை (ஏசிஎஸ்) அதிகாரியான நுபுர் போரா கடந்த ஆறு மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
கவ்ஹாத்தியில் உள்ள நுபுர் போராவின் வீட்டில் முதல்வரின் சிறப்புக் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள் (செப்டம்பர் 15) இரவு அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது ரூ.92 லட்சம் ரொக்கப் பணம், கிட்டத்தட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், பர் பேட்டாவில் உள்ள அவரது வாடகை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு, அங்கு ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் குற்றம் சாட்டி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
2019ஆம் ஆண்டு அசாம் குடிமைத்துறையில் இணைந்த நுபுர் போரா, கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தற்போது அவர் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோரோய்மாரியில் வட்டார அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். சந்தேகத்திற்குரிய ஊடுருவல்காரர்களின் பெயரில் அரசாங்க நிலங்களை நுபுர், சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“அவர், பர் பேட்டா வருவாய் வட்டத்தில் (Revenue Circle) பணியில் இருந்தபோது, பணத்திற்கு ஈடாக இந்துக்களின் நிலத்தைச் சந்தேகத்திற்குரியவர்களுக்கு மாற்றி இருக்கிறார். அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள வருவாய் வட்டங்களில் பரவலாக இது போன்ற ஊழல் நடந்துள்ளது,” என்று மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.
நுபுர் போராவின் நண்பரான சூரஜித் டெகா என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. நுபுர் போராவுடன் கூட்டு சேர்ந்து பல நிலங்களை வாங்கியதாக சூரஜித் டெகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.