ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தெலுங்கானாவில் காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத் துறை, துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) இருந்த சங்கிரெட்டி பீம் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது இருப்பிடத்திலிருந்து ரூ.300 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேறு பெயர்களில் அவர் வைத்திருக்கும் சொத்துகள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சங்கிரெட்டி மீது வந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டிலும் அவருக்குச் சொந்தமான 15 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில், தெலுங்கானா, கர்நாடகத்தில் ஏராளமான சொத்துகளை அவர் வாங்கிக் குவித்திருந்தது தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்தில் மிகப்பெரிய பங்களா, ஏராளமான வீடுகள், நிலங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், விவசாய நிலங்கள் போன்றவை அவர் பெயரில் உள்ளன.
ரூ.40 லட்சம் ரொக்கம், இரண்டு கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கில் ரூ.19.91 லட்சம் இருப்பு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மே மாதம் மனைவியுடன் புனித யாத்திரை கிளம்புவதற்கு முன்னதாக, தம்முடைய சொத்து விவரங்களை டையரிக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். கெடுபயனாக, அது தற்போது ஓர் ஆதாரமாகக் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறது.

