புதுடெல்லி: டெல்லியில் உள்ள முதியோர்கள் மீண்டும் ஓய்வூதியம் பெற தொடங்கியுள்ளதாக டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
முதியோர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு டெல்லி அரசு ரூ.2,200யும் மத்திய அரசும் ரூ.300யும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது பங்களிப்பைச் செலுத்தாததால் கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “டெல்லி முதியோருக்கு நற்செய்தி. கடந்த 5 மாதங்களாக டெல்லியைச் சேர்ந்த ஒரு லட்சம் முதியோரின் முதியோர் ஓய்வூதியத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறுத்திவைத்திருந்தது. இதனால், முதியோர் மிகவும் வருத்தமடைந்தனர்.
“பல போராட்டங்களுக்குப் பிறகு முதியோருக்கான ஓய்வூதியத்தை கெஜ்ரிவால் அரசு மீண்டும் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட ஓய்வூதியம் முதியோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது,” என்றார்.
60 வயதுக்கு மேற்பட்ட குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் கீழ் 60 முதல் 69 வயதிற்குட்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை சமூகப் பயனாளிகளுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.500 வழங்கப்படும்.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


