புதுடெல்லி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் நடைபெற்றுவரும் பூசலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், ஓமான் கடற் பகுதியில் இந்தியக் கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த கடலோடி காந்தார் நஹீம் அஜீஜ் உயிரிழந்தார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து குஜராத்தின் போர்பந்தருக்கு 950 டன் பேரீச்சம்பழங்களை ஏற்றிச் சென்ற ‘எம்எஸ்வி அல் ஜூசுஃபி’ என்ற சரக்குக் கப்பல்மீது, அடையாளம் தெரியாத பொருள் மோதித் தாக்கியது.
கப்பலைச் செலுத்தும் பகுதியில் இருந்த காந்தார் பலத்த காயமடைந்து, மருத்துவ அவசர உதவி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட கப்பலில் பயணம் செய்த மற்ற 13 இந்தியக் கடலோடிகளும் ஓமானியக் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அத்தாக்குதலை நடத்தியவர் குறித்து அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்திய வணிகக் கப்பல்மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சு, கொல்லப்பட்ட கடலோடியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும், உடனடியாகப் பதற்றத்தைக் குறைத்து, அமைதியை நிலைநாட்ட தூதரகப் பேச்சுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இந்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதலில் இதுவரை கொல்லப்பட்ட இந்தியக் கடலோடிகளின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, ரஷ்யா - உக்ரேன் போர்ப் பகுதியான கருங்கடலிலும் ஐந்து இந்தியர்கள் கொல்லப்பட்டனர்; இருவரைக் காணவில்லை.
