டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

2 mins read
8306a273-1718-4dc6-8b03-f7d965300ebd
இந்த அமைதிவழிப் போராட்டத்தின்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். - கோப்புப் படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது காவல்துறையினர் நடத்திய தடியடி, அரசியல் அமைப்பு உரிமைக்கு எதிரானது என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது தடியடி நடத்தியதை ஏற்க இயலாது எனக் கண்டனம் தெரிவித்தார்.

அமைதி வழியில் போராட்டம் நடத்த அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், வெறும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்பதற்காகவே காவல்துறை தடியடி நடத்தியதை நியாயப்படுத்த முடியாது என்றார்.

இந்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல்வேறு மாணவர்கள், இளையர் அமைப்புகளும் போராட்டத்தில் இணைந்தன.

இந்த அமைதிவழிப் போராட்டத்தின்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, இதுபோன்ற போராட்டங்களின்போது காவல்துறையின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த நாடுதழுவிய அளவில் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அம்மனுக்கள் மீதான விசாரணையின்போதே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட கருத்துகளையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அறவழியில் போராட்டம் நடக்கும்போது தடியடி நடத்தவேண்டிய தேவையில்லை என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்தார்.

ஒருவேளை போராட்டத்தின்போது வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறினால், அவை சார்ந்து விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் ஜனநாயகச் செயல்பாட்டில் ஒழுக்கம் என்பது முக்கியமான அங்கம் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

மேலும், காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விசாரணையுடன் சேர்த்து நாடு தழுவிய அளவிலான நடைமுறைகளை வகுப்பது குறித்து மத்திய மாநில அரசுகளின் பதில்களை எதிர்பார்ப்பதாக அந்த அமர்வு தெரிவித்தது.

இந்த விசாரணை செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 28) நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்
உச்ச நீதிமன்றம்நீதிபதிகரப்பான்பூச்சிமாணவர்கள்மாணவர்கள் போராட்டம்காவல்துறைதாக்குதல்