நியூயார்க்/புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அனைத்துலக வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று ஐக்கிய நாடுகள்(ஐ.நா) சபையில் இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொருளியல், சமூக மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் கலந்துகொண்டு பேசினார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மேற்காசியப் பகுதியில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி, உரத் தட்டுப்பாடு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
“இப்பிரச்சினைக்குத் தீா்வுகாண அனைத்துலக ஒத்துழைப்புடன் கூடிய குறுகியகால, அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.
“அதேவேளையில், மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படுவதும் இதனால் அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது.
“இப்பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது. இதுதொடா்பான அனைத்துலகக் கடல்சார் சட்டங்கள் அனைத்தும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்,” என்று பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா சென்றடைந்தது மேலும் ஒரு எல்பிஜி கப்பல்
மேற்காசியப் போரால் பதற்றம் நீடிக்கும் நிலையிலும் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் ஒரு எல்பிஜி எரிவாயுக் கப்பல் பாதுகாப்பாக இந்தியா சென்றடைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்புக் காரணங்களால் நடுக்கடலில் பல நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயுக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் இந்தியா, சீனா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் ஈரான் தொடர்ந்து அனுமதித்து வருகிறது.
அந்த வரிசையில், மார்சல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ‘எம்வி சிமி’ என்ற கப்பல் கத்தாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு, குஜராத் மாநிலம் காண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை காலை சென்றடைந்தது.
இக்கப்பல் கடந்த 13ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
மங்களூரு செல்லும் ‘என்.வி. சன்ஷைன்’
இதற்கிடையே, 46,392 டன் சமையல் எரிவாயுவுடன் சென்றுகொண்டிருக்கும் வியட்னாம் நாட்டின் கொடியைக் கொண்ட ‘என்.வி. சன்ஷைன்’ என்ற மற்றொரு கப்பல், கர்நாடக மாநிலம், புது மங்களூரு துறைமுகத்தை திங்கட்கிழமை (மே 18) சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான், அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான மோதலால் ஹோர்முஸ் நீரிணையில் பிற நாட்டுக் கப்பல்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் தடையற்ற எரிசக்தித் தேவையை உறுதிசெய்யும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 15 கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்து இந்தியாவுக்குச் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

