சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் 200 தானியங்கி வானிலை நிலையங்கள்

2 mins read
aef03b14-e1f0-4966-92a0-02fb90d83976
டெல்லியில் வியாழக்கிழமை (ஜனவரி 15) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151வது நிறுவன தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் (வலமிருந்து 3வது). - படம்: புரோகேரளா

புதுடெல்லி: சென்னை, டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் இந்த ஆண்டு தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் என்று மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை (ஜனவரி 15) அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நகர்ப்புற வானிலை கண்காணிப்பு உள்கட்டமைப்பு விரிவாக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டில் சென்னை உள்ளிட்ட நான்கு முக்கிய பெருநகரங்களில் 200 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்தத் தானியங்கி வானிலை நிலையக் கட்டமைப்பு துல்லியமான, உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவை வழங்கும். திடீர் மழை, இடியுடன் கூடிய மழை, தீவிர வெப்ப நிகழ்வுகள் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகக் கணிக்க உதவும்.

இத்தகைய தரவு சார்ந்த முன்னறிவிப்பு பேரிடர் அபாயத்தைக் குறைப்பதுடன், வேளாண்மை, விமானப் போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடல், பொதுப் பாதுகாப்பு போன்றவற்றில் சிறந்த முடிவெடுப்பதற்கும் மிக முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151வது நிறுவன தின நிகழ்ச்சியின்போது உரையாற்றிய அமைச்சர் இதனை அறிவித்தார்.

மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புறங்களில், உடனடி வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துவது ஆகியவற்றில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்றார் அவர்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் முக்கிய அமைப்பு என்ற அவர்,  ஏராளமான புதிய முயற்சிகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் வானிலை ஆய்வுத் துறையில் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரித்துள்ளது என்று சொன்னார்.

151வது நிறுவன தின நிகழ்வில், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, மூத்த அதிகாரிகள், அறிவியல் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்