பத்ரிநாத் கோவில் முறைகேடு: விசாரணைக்குழு அமைப்பு

பத்ரிநாத் கோவில் முறைகேடு: விசாரணைக்குழு அமைப்பு

1 mins read
19c68ca1-c6e0-42cd-8e36-1508d934e889
பத்ரிநாத் கோவிலில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணைக்குழு முதலில் ஆராயும் எனக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஹிமாலயன் டிரீம்

டேராடூன்: பத்ரிநாத் கோவில் முறைகேடு தொடர்பில் விசாரணை நடத்த நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது‌.

அயோத்தி, மதுரா கோவில்களையடுத்து, பத்ரிநாத் கோவிலிலும் காணிக்கைகள், நன்கொடைகளைக் கையாள்வதில் முறைகேடு நடைபெற்றதாக அண்மையில் புகார் எழுந்தது.

உத்தரப்பிரதேசத்தின் அண்டை மாநிலமான உத்தராகண்டில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலிலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுவது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இம்முறைகேடு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ஹேமந்த் திவிவேதி அறிவித்திருந்தார்.

இதையடுத்து, நான்கு பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இக்குழு அடுத்த ஏழு நாள்களுக்குள் முதற்கட்ட அறிக்கை அளிக்கும் என்றும் கோவிலின் தலைமைச் செயலதிகாரி சோஹன்சிங் ரங்கட் தெரிவித்தார்.

பத்ரிநாத் கோவிலின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணைக்குழு முதலில் ஆராயும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்படும் என்றும் அதன் அடிப்படையில் விசாரணைக்குழு விசாரணையைத் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பத்ரிநாத் கோவில் முறைகேடு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் தீவிரமானவை என்று உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் தெரிவித்துள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

காணிக்கை முறைகேடு பக்தர்கள் மனத்தைப் புண்படுத்தியுள்ளது என்றும் இந்த முறைகேடு நிரூபிக்கப்பட்டால் மாநில அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்