புதுடெல்லி: அதிகாரபூர்வ பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு உள்துறை அமைச்சர் வெட் கூப்பரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பிரிவினை வாத இயக்கம் இங்கிலாந்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து திரு ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தீவிரவாதம், ஆள்கடத்தல் உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காலிஸ்தான், ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (Sikhs for Justice) உள்ளிட்ட தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள் இங்கிலாந்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்தியா ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தி உள்ளது.
பிரிட்டன், அயர்லாந்து நாடுகளுக்கு ஆறு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.
லண்டனில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் வெட் கூப்பரைச் சந்தித்த பின்னர், அந்நாட்டு வர்த்தக அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசியது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளியல் ஒப்பந்தம், மக்கள் இடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.