தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் சிக்கிய பங்ளாதே‌ஷ் கள்ளக் குடியேறிகள்

2 mins read
8ecbfb32-a683-49da-b26b-1aa8a0891da3
டெல்லியில் பிடிபட்ட 9 பேர் அடங்கிய பங்ளாதே‌ஷ் குடும்பம் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. - கோப்புப் படம்

புதுடெல்லி: இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதே‌‌‌ஷைச் சேர்ந்த 9 பேர் அடங்கிய குடும்பத்தை டெல்லி காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) கைது செய்துள்ளனர்.

கைக்குழந்தையுடன் இருந்த அந்தக் குடும்பம் வடமேற்குப் பகுதியான பாரத் நகரில் குடியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஐஎம்ஓ (IMO) செயலி இருந்த திறன்பேசி வழி சட்டவிரோதமாகக் குடியேறிய குடும்பம் பங்ளாதே‌ஷில் உள்ள உறவினர்களுடன் உரையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர்கள் கூறினர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் எல்லை வழியாக 9 கள்ளக் குடியேறிகள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் ஜரியானாவில் உள்ள மேவாட் பகுதியில் வசித்த குடும்ப உறுப்பினர்களில் சிலர் செங்கல் உற்பத்தி ஆலையில் வேலை செய்தனர். ஹரியானா காவல்துறையிடம் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தால் அவர்கள் சில வாரங்களுக்கு முன் டெல்லிக்கு வந்தனர்.

அதிலிருந்து பல இடங்களுக்கும் மாறிச்சென்ற குடும்பம், உள்ளூர்வாசிகளுடன் கலந்துவிடவேண்டும் என்ற முயற்சியில் வாடகை வீட்டில் குடியேறியதாகத் துணைக் காவல்துறை ஆணையர் பி‌‌ஷம் சிங் விவரித்தார்.

“பாரத் நகரில் பங்ளாதே‌‌ஷைச் சேர்ந்த கள்ளக் குடியேறிகள் இருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்,” என்றார் திரு பி‌‌ஷம்.

சோதனையின்போது பிடிபட்ட சந்தேக நபர், விசாரணையின்போது தொடக்கத்தில் தாம் ஓர் இந்தியக் குடிமகன் என்று கூறி அதிகாரிகளைத் திசைதிருப்பப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், தொடர் விசாரணையின் மூலம் தாம் பங்ளாதே‌‌ஷைச் சேர்ந்தவர் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, ஆடவரின் மனைவி, பிள்ளைகள், ஒன்றரை மாதக் குழந்தை ஆகியோரைக் கண்டுபிடித்தோம்,” என்று திரு பி‌‌ஷம் கூறினார்.

பிடிபட்ட அனைவரும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட வெளிநாட்டினர் வட்டாரப் பதிவு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்