புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, அனில் அம்பானியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஏறக்குறைய ஒன்பது மணிநேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
66 வயதான அனில் அம்பானி, இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் ஆவார். இவர் ‘ரிலையன்ஸ் அனில் அம்பானி’ குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்
இந்நிலையில், தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ‘யெஸ்’ வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து அவர் கோடிக்கணக்கில் கடன் பெற்றதாகவும் பிறகு அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் புகார் எழுந்தது.
மேலும், தாம் பெற்ற கடனை மற்ற நிறுவனங்களுக்கு அனில் அம்பானி சட்டவிரோதமாக மாற்றிவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த முறைகேடுகளை மறைக்க வங்கி அதிகாரிகளுக்கு அவர் கையூட்டு கொடுத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அனில் அம்பானி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால் அமலாக்கத்துறை இந்த விசாரணையில் இணைந்துள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, அண்மையில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் அனில் அம்பானியுடன் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது.
மொத்தம் 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், இந்தக் கடன் மோசடி தொடர்பாக நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நேரில் முன்னிலையானார் அனில் அம்பானி.
அவரிடம் பத்து மணி நேரத்துக்கும் மேல் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசடி வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அனில் அம்பானி சில ஆவணங்களை அளிப்பதற்கு பத்து நாள்கள் அவகாசம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் ரூ.17,000 கோடி அளவுக்கு மோசடி செய்திருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் அனில் அம்பானி.
இது தொடர்பாக, ஏற்கெனவே ஒருவர் கைதாகி உள்ளார். விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை காலை 10.50 மணிக்கு அனில் அம்பானி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்ததாகவும் விசாரணைக்குப் பின்னர் அவர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.