புதுடெல்லி: இந்திய முக்குளிப்பு வீரர் பக்ஸ் குரானா போராபத்து மிக்க ஹோர்முஸ் நீரிணையில் கடலுக்கு அடியில் மூழ்கி சாகசம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரினால் கடும் பதற்றம் நிலவும் அப்பகுதியில், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற எச்சரிக்கையையும் மீறி குரானா ஏப்ரல் 11ஆம் தேதி அந்த சாகசத்தை மேற்கொண்டார்.
டால்பின்களும் கடற்கொள்ளையரும்: முக்குளிப்பாளரின் அனுபவம்
வழக்கமாக எண்ணெய்க் கப்பல்களால் பரபரப்பாகக் காணப்படும் அப்பகுதி, தற்போது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் அமைதியாகக் காணப்படுவதாக இந்தியா டுடே பத்திரிகையிடம் அவர் கூறினார்.
“இதற்குமுன் 15 முறை இங்கு வந்துள்ளேன். ஆனால், இப்போது கடல் நீர் வியக்கத்தக்க பச்சை நிறத்திலும், மிகவும் தெளிவாகவும் மாறியுள்ளது,” என்றார் அவர்.
“கண்ணிவெடிகள் குறித்த அச்சம் ஒருபுறம் இருந்தாலும் மனித நடமாட்டம் குறைந்ததால் டால்பின்கள் துள்ளி விளையாடுவதையும், செங்கால் நாரை பறவைகள் கூட்டத்தையும் ரசித்தேன். இது கொவிட் காலத்து அமைதியை நினைவுபடுத்தியது,” என்றார் அவர்.
டீசல் விற்க முயன்ற கடற்கொள்ளையர்கள் போன்ற இருவரைச் சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
போர்க்களத்தை அரிதான சூழலியல் மாற்றத்தைக் காணும் களமாக மாற்றியுள்ளது பக்ஸ் குரானாவின் துணிச்சலான பயணம்.

